Bio-Digester-பசுமை கழிப்பறை

Bitmap in Bio

ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளாக நாம் உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றை வகுத்திருக்கிறோம். இதற்கு அடுத்தபடியாக சுகாதாரம், கல்வி போன்றவற்றை குறிப்பிடலாம். அதே அளவிற்கான முக்கியத்துவத்தை அன்றாடம் உபயோகிக்கும் கழிவறைகளுக்கும் நாம் வழங்க வேண்டும் என்பதனை ஏனோ முற்றிலுமாக உதாசீனம் செய்துவிட்டோம். வளரும் நாடுகளுக்கு போட்டியாக, நாகரீகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் என்ற எத்தனை எத்தனையோ வகைகளில் முன்னேற்றம் கண்டிருக்கும் நாம் சுகாதாரம் குறித்தான போதிய விழிப்புணர்வை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பொது இடங்களையும், திறந்த வெளிகளையும் கழிவறைகளாக நம் மக்கள் உபயோகம் செய்வதை நாம் அன்றாடம் காண்கிறோம், மூக்கை மூடிக் கொண்டு அருவருப்புடன் கடந்து சென்று விடுகிறோம்.

எத்தனையோ வெளிநாடுகளுக்கு பயணம் சென்றுவிட்டு அந்த அழகையும் தூய்மையும் குறித்து சிலாகிக்கிறோம். இது போன்ற சுகாதாரமற்ற பழக்கங்கள் போதிய வசதி இல்லாத கிராமப்புறங்களில் மட்டுமல்ல, பெரிய மாநகரங்களிலும் கூட இதே நிலைதான் இன்று வரை தொடர்கிறது. வீடுகளில் கழிவறை இல்லாத நிலையில் பெண்களின் நிலை என்ன இருள் கவிழ்ந்ததும் அல்லது காலை மலரும் முன் அவர்கள் தங்களது இயற்கை கடன்களை முடித்தாக வேண்டிய கட்டாயம். அது மட்டுமல்லாமல் பொது இடங்களையும், திறந்த வெளிகளையும் கழிவறைகளாக பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் மாசடைவதுடன், எண்ணற்ற நோய் பரப்பும் கிருமிகளும் உருவாகும் அபாயம் உண்டு. மருத்துவம் பல முன்னேற்றங்களை கண்டுள்ளபோதும் இது போன்ற பொறுப்பற்ற சுகாதாரமற்ற பழக்கங்கள் புதிய புதிய நோய்களை உருவாக்கியபடியே தான் இருக்கும் .இதற்கு ஒரே தீர்வு கழிவறை பயன்பாடுகளை குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வை கொண்டு வருவதுதான். அத்துடன் இதற்கான மற்றுமொரு தீர்வு சுகாதாரமான சுற்று சூழலை பாதுகாக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட பயோ-டைஜஸ்டர் டாய்லெட்கள் தான்.

இந்த பயோ-டைஜஸ்டர் டாய்லெட்களை DRDO அறிமுகப்படுத்துகிறது. இது முழுக்க முழுக்க மக்களின் ஆரோக்யத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பயோ-டைஜஸ்டர் டாய்லெட்கள் காற்றழுத்த முறையில் செயல்படுகின்றன. வழக்கமாக நாம் பயன்படுத்தும் கழிவறைகள் வீட்டின் பின்புறத்தில் நிலத்தடியில் இருக்கும். அதில் சென்று தேங்கும் கழிவுகள் முழுவதுமாக மக்கிப் போகாமல் சில வேளைகளில் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி வெளியே கசியத் தொடங்கும். அதனை எவரேனும் துப்புரவு தொழிலாளர்களைக் கொண்டு சரி செய்ய வேண்டும். அந்த டாங்கிலிருந்து வெளியேறும் சகித்துக் கொள்ள இயலாத நாற்றம் நம்மை சங்கடப்படுத்தும். அத்தோடு இந்த செப்டிக் டாங்குகள் அரசு, அல்லது மாநகராட்சி சாக்கடை குழாய்களுடன் இணைக்கப்படாமல் இருந்தால் மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த கழிவுகள் நேரடியாக திறந்த வெளியில் சென்று கலந்துவிடுவதால் நமது குடிநீர் தூய்மை கெடுவதுடன், சுற்றுச் சூழல்களிலும் எண்ணற்ற பாதிப்பு உண்டாகிறது. இது போன்ற குறைகளை நிவர்த்தி செய்து மக்களின் தேவையையும் ஆரோக்யத்தையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த பயோ-டைஜஸ்டர்.

சுற்றுப்புற சூழ்நிலை சுகாதாரம் தான் ஒரு நாடு வளமான நாடாக மாறக்கூடிய சாத்தியக்கூறை உறுதிப்படுத்துகிறது. காடுகளை அழித்தல், கட்டுக்கடங்காத மக்கள் தொகை பெருக்கம், விலையேற்றம், பொருளாதார ஏற்றத் தாழ்வு போன்ற பல தடங்கல்களை குறித்தான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்தும் முயற்ச்சியில், பல் வேறு இயக்கங்களும் குழுக்களும் செயல்படுகின்றன. அது போலவே பசுமை புரட்சிக்கான மற்றுமொரு பாதையாக இந்த பயோ டைஜஸ்டர் கழிவறைகள் விளங்கும்.

பயோ டைஜஸ்டர் காற்றழுத்த முறையில் நுண்ணுயிர்களின் செயல்பாட்டினால் திடக் கழிவுகள் 99% மக்கச் செய்து விடும். பின்பு அதனை பயோ-வாயுவாக வெளியேற்றும். இப்படி வெளியேறும் வாயு நிறமில்லாதது, நாற்றம் இல்லாதது. இதை எரி சக்தியாக பயன்படுத்தி சமையல் கேஸாக, ஹீட்டர் போன்ற எளிய சாதனங்களை பயன்படுத்தவும் உபயோகிக்கலாம் என்பது இதில் கூடுதல் அம்சம். இத்தோடு கோரைப்புல் படுகையை இணைப்பதினால் கழிவு நீர் மேலும் சுத்திகரிக்கப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு உதவும்.இது போல சுழற்சி முறையில் இது பல வகையில் உதவுவதினால் தண்ணீர் விரயத்தை தடுத்து நீர் சிக்கனத்திற்கு பெரிதும் உதவும். அமேசான் காட்டை கொடையாக கொண்டுள்ள பிரேசில் நாட்டிலேயே தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் பொழுது, நாமும் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமாகிறது. அதற்கு பயோ டைஜஸ்டர் பெரிய அளவில் உதவும் .

  • இது சிக்கனமானது
  • நிர்வாக, மற்றும் பழுதாகும் செலவுகள் இல்லாதது.
  • சுகாதாரத்தை பேணுவது.
  • சிறிய இடத்தில் பொருந்தக் கூடியது.
  • சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கூடியது.
  • மலைப் பிரதேசங்களிலும், புண்ணிய ஸ்தலங்களிலும், சுற்றுலா ஸ்தலங்களிலும், ரயில், பேருந்து போன்ற வாகனங்களிலும் மிகவும் பயன் தரக் கூடியது.
  • குளிர்காலத்திலும், வெயில் காலங்களிலும் பாதிப்படையாதது.
  • பயோ டேங்குகளை ஒரு தனி வீட்டிற்கோ அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கோ தேவைக்கேற்றவாறு வடிவமைத்துக் கொள்ளலாம்

நம் நாட்டு எல்லையில் தங்கள் உயிரை பணயம் வைத்து நம்மை காக்கும் ராணுவ வீரர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவதியுறுவதை நாம் அறிவதில்லை .உணவு, உறைவிடம் போன்றவற்றை கூட சமாளித்து இட இயலும். ஆனால் இயற்கை கடன்களை எப்படி நிறைவேற்றாமல் இருக்க முடியும். அது போன்ற அவசரக் காலங்களில் பயோ டைஜஸ்டர் மிகப் பெரும் உதவியாக இருக்கும். 1984 -ஆம் வருடத்தில் இமாலய மலைகளில் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் உள்ள சியாச்சென் பனிப்பாறைகளில் நமது இந்திய ராணுவப்படை முகாமிட்டிருந்த பொழுது, மனிதக் கழிவுகளை அகற்றுவது என்பது மிகப்பெரிய பிரச்சனைக்குரிய ஒன்றாக இருந்தது. மிக அதிகமான குளிர் நிலையில் கழிவுகள் மக்கிபோகாமல் பனிப்பாறைகளிலேயே தேங்கி விடும். ஆனால் ராணுவ வீரர்களுக்கான ஒரே குடிநீர் ஆதாரம் பனிப்பாறைகள் தான். கழிவுகள் மக்காமல் தேங்கி இருக்கும் பனிப்பாறைகளின் மூலமாக எவ்வாறு அவர்கள் குடிநீர் தயாரித்துக் கொள்ள இயலும். இது எத்தகைய அவல நிலை ? இதனால் அவர்களுக்கு பல விதமான தொற்று நோய் பரவக்கூடிய அபாயம் எழுந்தது.

இறுதியாக DRDO இந்த பொறுப்பை எடுத்துக்கொண்டு மலைப் பிரதேசங்களிலும் கடும்குளிர் நிலவும் பகுதிகளிலும் கூட பயன்படுத்தக்கூடிய பயோ-டைஜஸ்டர் என்கிற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது . இது கழிவுகளை மக்கச் செய்ததோடு அல்லாமல் நோய் தோற்றும் அபாயத்தை தடுத்தது